-மூதூர் நிருபர்-
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், பாடசாலை மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம், மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இதில் மூதூர் வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள 20 பாடசாலைகளைச் சேர்ந்த, 240 மாணவர்கள் கலந்து கொண்டு கால்பந்தாட்ட பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டனர்.
இவ் பயிற்சி முகாமில் இலங்கை உதைப்பந்தாட்ட சங்க பிரதிநிதிகள், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், மூதூர் உதைப்பந்தாட்ட சம்மேளனம், மூதூர் கிரிக்கெட் சம்மேளனம் என்பவற்றின் தலைவர்கள், உறுப்பினர்கள், மூதூர் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மூதூர் பிரதேசத்தில் உதைப்பந்தாட்ட விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் இப்பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.