கிளிநொச்சி-செல்வாநகர் வித்தியாலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா, நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலை அதிபர் சி.மகேந்திரராஜா தலைமையில் இடம்பெற்றது.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து, 23 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் இந்த இரண்டு மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவே இப்பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது மாடிக்கட்டடம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநரால், புதிய கட்டடம் மாணவர்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டதுடன், வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் மற்றும் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி பிரதீபா காயத்திரி கஜபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக செல்வாநகர் முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தின் சிவஸ்ரீ விபுலானந்த குருக்கள், உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை வண. ஜோன்கனிசியஸ் அடிகளார், கரைச்சிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் சு.தர்மரத்தினம் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் பாடசாலைச் சமூகத்தினர், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
