16 வயது கர்ப்பிணி சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன்

இந்தியா – பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ரஜாவ்லி என்ற பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சோனு குமார். இவருக்கும் அங்குள்ள 16 வயது சிறுமி ஒருவருக்கும் ஓராண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகவே, சோனு குமார் மூலம் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

தனது கர்ப்பம் குறித்து சிறுமி, சோனு குமாரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்த தகவலை கேட்ட பின்னர் சோனு குமார் சிறுமியிடம் பேசுவதை தவிர்க்கத் தொடங்கினார். ஆனால், சிறுமி, சோனு குமாரை விடாமல் துரத்திய நிலையில் கடந்த மார்ச் 13ஆம் தேதி அன்று சிறுமிக்கும் சோனு குமாருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றிப்போகவே, சோனு குமாரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து அந்த சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை சிறுமியின் பெற்றோரின் முன்னிலையில் அரங்கேற்றியுள்ளனர். கர்ப்பிணி சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அத்தோடு நிற்காமல் சோனு குமாரின் குடும்பத்தினர் சிறுமியின் குடும்பத்தினரை சிறைபிடித்து அடைத்து வைத்தனர். யாருக்கும் தெரியாமல் சிறுமியின் உடலை அடக்கமும் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 4 நாட்கள் கழித்து சிறுமியின் தந்தை அவர்களிடம் இருந்து தப்பி வந்து பொலிஸாரிடம் விவரத்தை கூறி புகார் தெரிவித்தார். அதன் பேரில் சோனு குமார் உள்ளிட்ட 4 பேர் மீது FIR பதிவு செய்த பொலிஸார் தலைமறைவாக உள்ள சோனு குமார் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்