எப்போதும் நிகழாது என்று இருந்த மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள், நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் – வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.