ஹண்டா (Hanta) வைரஸ் பரவியதால் கடும் அவதானத்திற்குள்ளான, நெதர்லாந்திற்குச் சொந்தமான ‘MV Hondius’ என்ற சுற்றுலா கப்பலில் இருந்த மூன்று நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக வெளியேற்றப்பட்ட பின்னர், அக்கப்பல் கேப் வெர்டே தீவுகளில் இருந்து புறப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் 56 வயதுடைய பிரித்தானியர் ஒருவரும், 41 வயதுடைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவரும், 65 வயதுடைய ஜெர்மனியர் ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக விமானம் மூலம் நெதர்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளியேற்றப்பட்டவர்களில் இருவர் ஏற்கனவே நெதர்லாந்திலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது நபர் பயணித்த விமானம் தாமதமாகியுள்ளதாக கப்பல் நிறுவனமான Oceanwide Expeditions தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அர்ஜென்டினாவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பலில் இருந்த மூவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றைய இரு மரணங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, இந்தக் கப்பலில் ஹண்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 3 நோயாளிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய 5 நோயாளிகள் உட்பட மொத்தம் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொதுவாக எலிகள் மூலம் பரவும் இந்த வைரஸ், இந்தச் சம்பவத்தில் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட மனிதர்களிடையே பரவியிருக்கலாம் என சுகாதார நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
தற்போது 146 பேருடன் பயணிக்கும் இந்தக் கப்பல், இன்னும் மூன்று நாட்களில் ஸ்பெயினுக்குச் சொந்தமான ‘கேனரி’ தீவுகளைச் சென்றடையவுள்ளது. இதற்கு ஸ்பெயின் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ள போதிலும், கேனரி தீவுகளின் தலைவர் பெர்னாண்டோ கிளாவிஜோ இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
லத்தீன் அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் ‘எண்டீஸ்’ எனும் வைரஸ் வகை இந்த நோயாளிகளிடம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தென்னாப்பிரிக்க சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இது மனிதர்களிடையே பரவும் தன்மையைக் கொண்ட ஒரு வகையாகும்.
இருப்பினும், இது கொவிட் அல்லது காய்ச்சலைப் போல காற்றின் மூலம் வேகமாகப் பரவாது என்றும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவ மிக நெருக்கமான உடல் ரீதியான தொடர்பு அவசியம் என்றும் உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கப்பலில் உள்ள அனைவரும் தற்போது கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளதோடு, கேனரி தீவுகளைச் சென்றடைந்ததும் அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.