மட்டக்களப்பு- முறக்கொட்டான்சேனை பகுதியில், கம்பியை நெருப்பில் பழுக்க வைத்து தன்னுடைய 8 வயது மகனின் வாயில் சூடு வைத்த தந்தை ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில், 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் 8 வயது சிறுவன், வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.
இது தொடர்பாக சிறுவனின் பெற்றோரிடம் ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து கோபமடைந்த தந்தை, கடந்த செவ்வாய்க்கிழமை கம்பி ஒன்றை நெருப்பில் பழுக்க வைத்து மகனின் வாயில் குறுக்காக நீண்ட கோடாக சூடு வைத்துள்ளார்.
இந்த விடயம் அப்பகுதி கிராம சேவகருக்கு தெரிய வந்ததையடுத்து, அவர் பொலிஸாரிடம் இச்சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சிறுவனின் தந்தையை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.