மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கொண்டு சென்று முச்சக்கரவண்டியின் சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து அவரின் தங்க ஆபரணங்கள்இ பணம் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கொள்ளையர்களால் மயக்கமருந்து கொடுக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி ரிதிதென்னை காட்டு பகுதியில் இருந்து மயங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சின்ன ஆஸ்பத்திரிக்கு முன்னால் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து வாடகைக்கு சவாரி செய்துவரும் பூநொச்சி முனையைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி ஓட்டுநர் சம்பவ தினமான நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் தனது வீட்டுக்கு சென்று மதிய உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு வந்துள்ளார்.
அங்கிருந்து தனது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பெடுத்து இரவு cணவுக்காக இடியப்பம் வாங்கி கொண்டு இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் இரவு 11 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை அவரிடமிருந்து எவ்வித தகவலும் இல்லை இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு அளித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர் தொழில் புரியும் முச்சக்கரவண்டி ததரிப்பிடத்தில் சென்று விசாரித்த போது அந்த தரிப்பிடத்திலிருந்து குறித்த முச்சக்கரவண்டியை ஒருவர் வாழைச்சேனை வரை செல்வதற்காக வாடகைக்கு அமர்த்தி கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் இன்று வியாழக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதி தென்னை காட்டு பகுதியில் முச்சக்கரவண்டியில் ஒருவர் மயங்கி கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி சென்று அவருக்கு மயக்க மருந்து தெளித்து அவரின் ஒரு பவுன் தங்க மோதிரம் பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுவிட்டு அவரை காட்டு பகுதியில் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மட்டு தலைமையக மற்றும் வாழைச்சேனை பொலிஸார் இணைந்து இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (Image AI Generated)