நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதுவரை 203 பேர் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நோய்த்தொற்றுகள் தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூளைக்காய்ச்சல் (Meningitis) என்பது மூளை மற்றும் முதுகுத் தண்டைச் சுற்றியுள்ள மெல்லிய திசுக்களில் (மெனிஞ்சஸ்) ஏற்படும் தீவிரமான வீக்கத்தைக் குறிக்கும். இது பொதுவாக பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றுகளால் ஏற்படுகிறது.
மூளைக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள்
1. திடீர் அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான தலைவலி
2. கழுத்துப் பகுதி இறுக்கமாக மாறுதல் (கழுத்து விறைப்பு)
3. குமட்டல் மற்றும் வாந்தி
4. ஒளி அல்லது சத்தம் பிடிக்காமை
5. குழப்பமான மனநிலை, சோர்வு
6. தசைவலி மற்றும் மூட்டு வலி
7. தோல் வெடிப்பு
8. தூங்குவதில் சிரமம் அல்லது தூக்கத்தில் இருந்து எழுவதில் சிரமம்
மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை எவ்வாறு இணங்கான்பது?
1. அதிக காய்ச்சல் காரணமாக குழந்தைகளின் உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பது.
2. தலையில் வீங்கிய மென்மையான புள்ளி காணப்படுதல்
3. குழந்தைகள் வழமைக்கு மாறாக அதிகமாக எரிச்சலடைந்து அழுது கொண்டிருப்பார்கள் அல்லது ஓயாமல் அழுது கொண்டிருப்பார்கள்
4. உணவு ஊட்டுவதில் சிரமம் உணவை சாப்பிட மாட்டேன் என தீவிரமாக அடம்பிடிப்பார்கள்
5. குழந்தைகள் வழக்கத்தை விட அதிகமாக தூங்கலாம் அத்துடன் அவர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவது சிரமமாக இருப்பது.
6. உடல் மற்றும் கழுத்தில் தொட்டுப் பார்க்கும் போது மென்மை தன்மையற்று விறைப்பாக காணப்படலாம். (இதனை கண்டுபிடிப்பது சற்று சிரமம் என சொல்லப்படுகின்றது)
மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் யாருக்கு உள்ளது?
மூளைக்காய்ச்சல் யாருக்கும் ஏற்படலாம், ஆனால் சிலருக்கு அது இலகுவாக ஏற்படும் அபாயம் உள்ளதாக சொல்லப்படுகின்றது.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
15 மற்றும் 24 வயதுக்குட்பட்டவர்கள்
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் (வயதுக்கு ஏற்ப நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைகிறது, நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது)
பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் (நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை உட்கொள்பவர்கள் மற்றும் நீரிழிவு, HIV போன்ற நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள்)
மூளைக்காய்ச்சல் எவ்வாறு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகின்றது?
பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு அதாவது மிக நெருக்கமாக இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற சந்தர்ப்பங்களில் இருமல், தும்மல் அல்லது சுவாசத் துளிகள் பரிமாறப்படும் போது பரவும்
மூளைக்காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகள் மேற்பரப்பில் வாழலாம், ஆகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் பொருட்கள் அதாவது அவர் பாதித்த பாத்திரங்கள், Towel, ToothBrush போன்வற்றை நிங்கள் பாவிப்பதன் மூலம் பரவும்
மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் பிரசவத்தின்போது குழந்தைக்குத் தொற்று ஏற்படலாம்.
மூளைக்காய்ச்சல் தடுப்பு என்ன?
தடுப்பூசிகள் ஒரு முக்கியமான தடுப்பு நடவடிக்கையாகும்
சோப்பு மற்றும் தண்ணீருடன் கைகளை கழுவுதல் அல்லது கை சுத்திகரிப்பாளரைப் பயன்படுத்துவது மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய தொற்று கிருமிகள் பரவுவதை நிறுத்த உதவும்
நோய்வாய்ப்பட்டவர்களிடம் நெருங்கிப்பழகுவதை தவிர்ப்பதன் மூலம் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம்.
ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை மூளைக்காய்ச்சல் வருமா?
ஆம், பல்வேறு வகையான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் நோயை உண்டாக்கும் என்பதால், மூளைக்காய்ச்சல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வர வாய்ப்பு உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கினறனர்.
தீர்வு என்ன?
உடனடி மருத்துவ கவனிப்பு உயிர்களைக் காப்பாற்றும். உங்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ மூளைக்காய்ச்சல் இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால், தாமதிக்காதீர்கள். உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
இலங்கையை பொறுத்தவரையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நோய் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி வலியுறுத்தியுள்ளார். (Minnal24 News)