இரண்டு கொலை சம்பவங்கள் தொடர்பாக, மூன்று வருடங்களுக்கு மேலாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், கடந்த சனிக்கிழமை மதுகம – வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு – ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த மகேஷ் அசலங்க டி சொய்சா (வயது 47) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை கிரேட் வெஸ்டன் (Great Western) மலையில் உச்சியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் தலங்கம பொலிஸ் பிரிவில் 57 வயதான பெண்ணொருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தலைமையிலான அதிகாரிகள் குறித்த இரண்டு கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவரை, அவரது தொலைபேசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் அறிக்கை பெற்று அதில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கைது செய்து, மேலதிக விசாரணையின் பின்னர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து லிந்துலை பொலிஸாரால் தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சட்டவைத்திய அதிகாரி பரிசோதனையை மேற்கொண்டு, பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரு கொலை சம்பவங்கள் தொடர்பிலும், லிந்துலை பொலிஸார் மற்றும் தலங்கம பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .