முச்சக்கரவண்டியும், இராணுவப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில், தம்பதியினர் படுகாயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்று வியாழக்கிழமை மாலை, கந்தளாய்-87ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கந்தளாய், அக்போபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியினரே இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.
குறித்த தம்பதியினரில் கணவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கந்தளாய் வைத்தியசாலையில் இரத்தம் சுத்திகரிப்பு (Dialysis) சிகிச்சை பெற்றுக்கொண்டு, தனது மனைவியுடன் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பியுள்ளார்.
அவரே முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு மற்றும் மயக்கம் காரணமாக முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் தவறான பக்கத்திற்குச் சென்று, எதிரே வந்த இராணுவப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த கணவன் மற்றும் மனைவி இருவரும், கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பாக கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.