கட்டாயமான SLS 591 தரச்சான்று முத்திரை இல்லாமல் மீன் டின்களை விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பில், பல்பொருள் அங்காடி நிறுவனமொன்றின் நிர்வாகி உள்ளிட்ட ஐந்து பேருக்கு மொத்தம் 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த பல்பொருள் அங்காடி நிறுவனத்தின் நிர்வாகி மற்றும் அதன் இரண்டு அதிகாரிகளுக்கு மொத்தமாக 90,000 ரூபா அபராதமும், மீன் டின்களை உற்பத்தி செய்த நிறுவனத்திற்கும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருக்கும் 20,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டது.
இதன்போது, கட்டாயமான SLS 591 தரச்சான்று முத்திரை இல்லாத 185 கிராம் எடையுடைய 87 மீன் டின்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் சூரியகாந்தி எண்ணெய் அடங்கிய 64 மீன் டின்களும், ஒலிவ் எண்ணெய் அடங்கிய 23 மீன் டின்களும் காணப்பட்டுள்ளன.
இவற்றில் 32 மீன் டின்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், ஏனைய 55 டின்கள் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உரிய தரச்சான்று முத்திரை இல்லாமல் மீன் டின்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்துதல், களஞ்சியப்படுத்துதல், உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து, ஐந்து பிரதிவாதிகளுக்கும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மொத்தம் 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.










