மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நான்கு முக்கிய சேவைப் பிரிவுகளில் 223 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று சனிக்கிழமை காலை, அமைச்சின் உயிரியல் மருத்துவப் பொறியியல் பிரிவின் புதிய கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தின் நிதி ஒழுக்கம் மற்றும் தேவைகளின் அடிப்படையிலான ஆட்சேர்ப்புக் கொள்கையை வலியுறுத்தினார்.
“பொதுச் சேவையை தேவையற்ற விதத்தில் விரிவுபடுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமையை ஏற்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை” என அவர் தெரிவித்தார்.
கடந்தகால அரசாங்கங்கள் தேர்தல் நோக்கங்களுக்காக அரச சேவை ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் நிறுவனங்களின் உண்மையான தேவைகளை பிரதமரின் செயலாளர் தலைமையிலான முறையான குழுவின் ஊடாக மதிப்பீடு செய்வதாகத் தெரிவித்தார்.
இதன்படி, 36 சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், 27 களஞ்சியப் பொறுப்பாளர்கள், 6 சிறு சேவை கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 154 சுகாதார உதவியாளர்கள் என மொத்தம் 223 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இம்மாத இறுதிக்குள் ஆரம்ப நிலை மருத்துவ அதிகாரிகள் 1,600 பேரை மேலதிகமாக ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.
அரச சேவைக்கான வருடாந்த சம்பளச் செலவுகள் தற்போது சுமார் 900 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகவும், இந்த நிதி முழுமையாக பொதுமக்களின் வரி வருமானத்திலிருந்து பெறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அரச நிதியைப் பொறுப்புடன் பயன்படுத்தி தமது கடமைகளை நிறைவேற்றுமாறு அனைத்து அதிகாரிகளையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், புதிதாக நிரந்தர நியமனம் பெற்றவர்களும் அரசாங்கத்தின் எதிர்வரும் சம்பளத் திருத்தங்களின் மூலம் நன்மைகளைப் பெறவுள்ளனர். இதன்படி, ஜனவரி மாதம் அடிப்படைச் சம்பள அதிகரிப்பும், ஜூலை மாதம் கொடுப்பனவு அதிகரிப்பும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் ஜனக கித்சிறி குணவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.










