இஸ்ரேலிடம் இருந்து கண்காணிப்பு ட்ரோன்களைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள 4.26 பில்லியன் ரூபா ஒப்பந்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கொள்வனவு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் குறித்த விமானங்கள் அமெரிக்காவுக்காக உளவு தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகங்களையும் அவர் முன்வைத்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம், போட்டித்தன்மை வாய்ந்த விலைமனுக் கோரல் இன்றி அரசாங்கம் இந்தக் கொள்வனவை முன்னெடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
“ஆளில்லா விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக 4 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான குறைநிரப்பு மதிப்பீடு அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றை யாரிடமிருந்து கொள்வனவு செய்கிறோம்? இஸ்ரேலிடமிருந்து” என அவர் தெரிவித்தார்.
“இந்த திடீர் அவசரம் ஏன்? விலைமனுக்களைக் கோராமல் நேரடியாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏன் இஸ்ரேலிடமிருந்து இந்த விமானங்களை கொள்வனவு செய்கிறோம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கொள்வனவுடன் தொடர்புடைய நிதி ஆதாயங்கள் குறித்த சந்தேகங்களையும் ரவூப் ஹக்கீம் முன்வைத்தார். எனினும், அதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை.
“இஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்து எவ்வளவு தரகுப் பணம் கிடைத்திருக்கலாம் என்பது யாருக்குத் தெரியும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்தக் கண்காணிப்பு ட்ரோன்கள் ஈரானிய கப்பல்களைக் கண்காணித்து அமெரிக்காவுக்கு உளவுத் தகவல்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“இந்த விமானங்கள் ஈரானை உளவு பார்ப்பதற்கும், ஈரானிய கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவை தொடர்பான தகவல்களை வழங்குவதற்கும் கொள்வனவு செய்யப்படுகின்றன” என அவர் தெரிவித்தார்.
“அமெரிக்கர்களுக்காக உளவு பார்ப்பதற்கு எமது கடற்படையையும் விமானப்படையையும் பயன்படுத்தப் போகிறோமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இத்தகைய நடவடிக்கைகளில் இலங்கையின் பாதுகாப்புப் படைகளை ஈடுபடுத்துவது நாட்டின் வெளிநாட்டு உறவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் அரசாங்கத்தை எச்சரித்தார்.
“இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உங்களுக்கே பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏற்கனவே நீங்கள் போதுமான பிரச்சினைகளை உருவாக்கியுள்ளீர்கள்” என அவர் கூறினார்.
காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியையும் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், பலஸ்தீன மக்கள் துன்புறும் நிலையில் இஸ்ரேலிடம் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை கேள்விக்குட்படுத்தினார்.
“கனமழையின் போது காஸா மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைப் பாருங்கள்” என அவர் தெரிவித்தார்.
“விலைமனுக்களைக் கோராமல் இஸ்ரேலிடமிருந்து இந்த விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் பலஸ்தீன மக்களைப் பற்றி சிந்தியுங்கள்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் பரந்த வெளிநாட்டுக் கொள்கையையும் விமர்சித்த அவர், ஈரான் மற்றும் வெனிசுவேலா தொடர்பான சர்வதேச முன்னேற்றங்களுக்கு அரசாங்கம் போதுமான பதிலளிக்கத் தவறியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
“உங்களுடைய வெளிநாட்டுக் கொள்கை குறித்து எங்களுக்கு விரிவுரை செய்யாதீர்கள்” என அவர் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், இலங்கை விமானப்படைக்காக ஆளில்லா விமானக் கட்டமைப்பை நிறுவுவதற்கு 4.261 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீட்டை நவம்பர் 5ஆம் திகதி நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட நான்கு ட்ரோன்களை BlueBird Aero Systems நிறுவனத்துடன் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர முன்னதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தக் கொள்வனவு அவசர கொள்வனவாக முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், கடல்சார் கண்காணிப்பு, சந்தேகத்திற்கிடமான கப்பல்களைக் கண்காணித்தல், காணாமல் போன மீனவர்களைத் தேடுதல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவுதல் ஆகியவற்றுக்காக இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.
விமானப்படையின் தற்போதைய ஹெலிகொப்டர் பராமரிப்பு ஒதுக்கீட்டில் உள்ள சேமிப்பிலிருந்து இந்த நிதி பெறப்படும் என்றும், இதற்காக மேலதிக நிதி ஒதுக்கீடு தேவையில்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.










