அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகம் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தாமை தொடர்பில் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உறுதியளிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திறன் குறித்து கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் சாதாரண மக்களுக்கு தொடர்ந்தும் அதிக சுமையை ஏற்படுத்துவதாகவும், பால்மா மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு போதுமான நிவாரணங்களை வழங்கத் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், துறைமுகம் மற்றும் கப்பல் கட்டுமானத் துறைகளில் இந்தியாவின் அதானி குழுமம், சீனாவின் China Merchants மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர்களுடன் தொடர்புடைய முக்கிய திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பினார்.
முதலீடுகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறை, ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களுக்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக மேலதிக நிர்வாகத் தடைகளை உருவாக்குகின்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
புதிய நிர்வாகப் பிரிவுகளை உருவாக்குவதையும் நாமல் ராஜபக்ஷ விமர்சித்தார். முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்கனவே உள்ள நிறுவனங்களை வலுப்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், விளையாட்டு, விவசாயம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொறுப்பான பல அமைச்சுக்கள், கடந்தகால வரவு செலவுத் திட்டங்களின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அனர்த்த நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட கணிசமான நிதி, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக செலவிடப்படாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வீண் செலவுகளைக் குறைத்ததன் மூலம் சேமிக்கப்பட்ட நிதியாக செலவிடப்படாத ஒதுக்கீடுகளை அரசாங்கம் முன்வைப்பதாகவும், உண்மையில் அவை திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தவறியதன் விளைவாக இருக்கலாம் என்றும் நாமல் ராஜபக்ஷ வாதிட்டார்.










