மட்டக்களப்பு நகரில் விரைவு உணவு விற்பனை நிலையத்தில் சுகாதார சீர்கேடு – தற்காலிகமாக மூடப்பட்டது

-எமது மட்டக்களப்பு நிருபர் க.கிருபாகரன்-

மட்டக்களப்பு நகரில் இயங்கி வந்த விரைவு உணவு விற்பனை நிலையம் இங்கு காணப்பட்ட சுகாதார சீர்கேட்டை அடுத்து மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக பிராந்திய சுகாதார பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ பணிமனையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் குறித்த உணவு நிலையத்திற்கு சென்று திடீர் சோதனையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது உணவு பொருட்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படாமை, களஞ்சியப்படுத்தப்படாமை, கழிவு நீர் முகாமைத்துவம் சரியாக பேணப்படாமை உணரப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்தின் மேல் வழக்கு தொடரப்பட்டு, மட்டக்களப்பு நீதி மன்றத்தினால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தற்காலிகமாக 4 நாட்கள் மூடப்பட்டுள்ளது.

மேலும் மேலதிக நீதி மன்ற ஆணைக்காக தற்காலிகமாக குறித்த நிறுவனம் பூட்டப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இவ்வாறாக செயற்படும், உணவகங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என , மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி முரளீஸ்வரன் மின்னல்24 தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்