கொழும்பில் பயணியொருவர் தவறவிட்ட பணப்பையை கண்டெடுத்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர், அதிலிருந்த பணம், அடையாள அட்டைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எதனையும் எடுக்காமல் உரியவரைத் தேடிக் கண்டுபிடித்து பணப்பையை மீண்டும் ஒப்படைத்துள்ளார்.
பம்பலப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை நோக்கி மாலை நேர போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் அந்த முச்சக்கரவண்டியில் பயணித்தபோது, தனது வாழ்க்கை சிறிது நேரத்தில் பதற்றமாக மாறப்போகிறது என்பதை அந்த பயணி அறிந்திருக்கவில்லை.
மாலை நேரம் கடந்திருந்த நிலையில், கொழும்பின் ஈரப்பதமான காற்றில் தெருவோர உணவுகளின் மணமும் கடலின் உவர்ப்பும் கலந்திருந்தன.
வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்புகளுக்கு அருகில் தான் போக வேண்டிய இடத்தை அடைந்ததும், பயணி முச்சக்கரவண்டிக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு சாரதிக்கு நன்றி தெரிவித்தபடி அங்கிருந்து சென்றுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர் தனது சட்டைப் பையைப் பார்த்தபோதுதான் பணப்பை காணாமல் போயிருப்பதை அவர் உணர்ந்துள்ளார்.
அதில் பணம் மட்டுமல்லாது, வெளிநாட்டு அடையாள அட்டை, காப்புறுதி அட்டைகள், முக்கியமான உத்தியோகபூர்வ ஆவணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் இருந்துள்ளன. குறிப்பாக சொந்த நாட்டை விட்டு வெளியே இருக்கும் நிலையில் அவ்வாறான ஆவணங்களை இழப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் அவர் கடும் பதற்றமடைந்துள்ளார்.
தான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என நினைத்து இரவு முழுவதும் கவலையுடன் தூக்கமின்றி தவித்துள்ளார் அந்த பயணி
எனினும், மறுநாள் அவரது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.
வீட்டிற்கு சென்ற முச்சக்கரவண்டியின் சாரதி நந்த குமார் தனது முச்சக்கரவண்டியின் இருக்கையின் ஓரத்தில் பணப்பை ஒன்று சிக்கியிருப்பதை அவதானித்துள்ளார்.
உடனே அதனை எடுத்துப் பார்த்தவர் அந்த பணப்பை யாருடையது என்பதை அடையாளம் கண்டுள்ளார்.
அந்த பணப்பையில் இருந்த எதையுமே எடுத்துக்கூட பார்க்காமல், அதன் உரிமையாளரைத் தேடிக் கண்டுபிடித்து பணப்பையை ஒப்படைப்பதையே தனது கடமையாகக் கருதி நந்த குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இறுதியாக பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தபோது, உரியவர் அதனைத் திறந்து பார்த்ததில் அதிலிருந்த ஒவ்வொரு பணத்தாளும், காப்புறுதி அட்டைகளும் முக்கியமான ஆவணங்களும் அப்படியே இருந்துள்ளன. எதுவும் காணாமல் போகவில்லை.
நன்றியையும் அவரது நேர்மைக்கான பாராட்டையும் தெரிவிக்கும் வகையில் பணப்பரிசு வழங்க முயன்றபோதும், நந்த குமார் அதனை ஏற்க மறுத்துள்ளார்.
“வேண்டாம், வேண்டாம். உங்கள் பணத்தை வைத்துக்கொள்ளுங்கள். அதை பாதுகாப்பாகத் திருப்பிக் கொடுக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி” எனக் கூறி அவர் பணத்தை நிராகரித்துள்ளார்.
நந்த குமார் அங்கிருந்து முச்சக்கரவண்டியில் சென்றதை வெள்ளவத்தை வீதியில் நின்றபடி பார்த்தபோது, பணப்பையை இழந்தவருக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிம்மதி ஏற்பட்டுள்ளது.
சுயநலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் சூழல்கள் காணப்படும் இன்றைய காலத்திலும், நேர்மையும் நாணயமும் இன்னும் உயிருடன் இருப்பதை நந்த குமார் தனது செயல் மூலம் நிரூபித்துள்ளார்.
அவர் பணப்பையை மட்டுமல்ல, அதனை இழந்தவரின் நிம்மதியையும் மீண்டும் வழங்கியுள்ளார். அதற்காக எந்தவொரு பணப்பரிசையும் பெற்றுக்கொள்ளாமல், தான் சரியானது என நம்பிய செயலைச் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார் நந்த குமார்.









