நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த மோதல் சம்பவம் தொடர்பில் தாம் ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொறுப்பான அமைச்சராக இதற்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.
தற்போது சிறைச்சாலையின் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மனித உயிரிழப்புகளை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் வலியுறுத்தினார்.
“இந்த மனித உயிரிழப்புகள் என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஒருவர்மீது குற்றச்சாட்டை சுமத்துவதை விட, உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டறிந்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதவாறு நடவடிக்கை எடுப்பதே தமது முக்கிய நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.