பேஸ்புக்கில் விற்பனைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட வேனை போலியான கொள்முதல் நடவடிக்கையின் மூலம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை (16) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் வாகன விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட சுமார் 10 பேர் தொடர்புடையதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த ஜூலை 13 ஆம் தேதி யக்கல பகுதியில் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
புதிதாக கைது செய்யப்பட்டுள்ள 32, 36 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்கள் திஹாரியா, கிரியுல்ல மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்கள் இன்று (17) வெள்ளிக்கிழமை கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.