இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் “அரோகரா” கோஷங்களுக்கு மத்தியில் இன்று புதன்கிழமை (15) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
விசேட பூஜைகளுடன் ஆலயக் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, பால்குடிபாவா பள்ளிவாசல் வளாகத்தில் நான்கு சமயத் தலைவர்களின் ஆசியுடன் ஏற்றப்பட்டது.
இன, மத, மொழி வேறுபாடுகளை கடந்து நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் கொடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனிடையே, உகந்தை மற்றும் குமண தேசிய பூங்கா வழியாக காட்டுப்பாதை ஊடாக மேற்கொள்ளப்பட்ட புனித பாதயாத்திரையில் ஈடுபட்ட முதலாவது பக்தர்கள் குழு இன்று அதிகாலை கதிர்காமத்தை வந்தடைந்தது.
முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் உள்ளிட்ட பலரும் கடினமான காட்டுப்பாதைகளை கடந்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளனர்.
ஆடிவேல் விழாவின் முதலாவது திருவீதி உலா இன்று இரவு நடைபெறவுள்ளதுடன், விழாவின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ளது.