மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு நடைமுறைசார் மற்றும் நீதியான தீர்வுகளை எட்டும் நோக்கில், மாவட்டச் செயலாளர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை முக்கிய கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணி ஆணையாளர் நாயகம், மாகாண காணி ஆணையாளர், மாவட்டச் செயலாளர், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தின் காணி நிர்வாகம், காணி உரிமைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
அரச காணிகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, நீண்டகால குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட அரச காணிகள் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடப்பதோடு, சில சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக பயன்படுத்தப்படுகின்றமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அவ்வாறான அனைத்து காணிகளையும் மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேச்சல் தரை நிலங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றின் தற்போதைய நிலை, பயன்பாடு மற்றும் எதிர்கால முகாமைத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இன்று கலந்துரையாடப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் தொடர்பான விரிவான அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிக்குமாறு காணி ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.