மட்டக்களப்பு – கல்லடி பகுதியில் இடம்பெற்று வரும் புத்தாண்டு காணிவேல் (Carnival) நிகழ்வின் போது, நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவர்களுக்கான புகையிரத வண்டியில் (Train Ride) பயணித்துக் கொண்டிருந்த போது, குறித்த பெண் எதிர்பாராத விதமாக அதிலிருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானார்.
விபத்தைத் தொடர்ந்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் புதன்கிழமை, விபத்து இடம்பெற்ற கல்லடி காணிவேல் திடலுக்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.
விபத்து நிகழ்ந்த விதம் மற்றும் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து அவர் கேட்டறிந்தார்.
விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதல்வர்,
விளையாட்டு உபகரணங்களில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது. குறிப்பாக இவ்வாறான புகையிரத வண்டிகளில் இருக்கைப்பட்டிகள் (Seat Belts) கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், இங்குள்ள சில விளையாட்டு நிகழ்வுகளில் அத்தகைய பாதுகாப்பு கவசங்கள் இல்லாது இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத மற்றும் பாதுகாப்பு கவசங்கள் இல்லாத விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தேவையற்ற விபத்துகளைத் தவிர்க்க மக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும், என தெரிவித்தார்.