நடிகர் கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் முதல் பார்வை

நடிகர் கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் முதல் பார்வையை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சர்தார் திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய 25ஆவது திரைப்படத்தில் கார்த்தி நடிக்கிறார். ஜப்பான் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தை, ராஜூ முருகன் இயக்குகிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 12 ஆம் திகதி ராமநாதபுரத்தில் தொடங்கியது.

மேலும் நாளை முதல் நடிகர் கார்த்தி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜப்பான் திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அது உண்மை சம்பவமாக இருந்தாலும், அதில் இன்று ஏராளமான மாற்றங்களை செய்து கதை எழுதியுள்ளார் ராஜூ முருகன்.

ஜப்பான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் தொடங்கியுள்ள நிலையில், கொடைக்கானலில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்துகின்றனர். இந்த நிலையில் தற்போது படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். அதில் கார்த்தியின் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த முதல் பார்வையின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார் அதேபோல் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து மிரட்டியவர். ‘ஜப்பான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சுனில்.