சட்டவிரோத தந்தி பணப் பரிமாற்றங்கள் (Telegraphic Transfers) மூலம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 750 கோடி ரூபாய்) வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரை எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், 2024 ஜனவரி முதல் 2025 ஜூலை வரையான காலப்பகுதியில் இந்தப் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஆறு போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி, வர்த்தக வங்கிகள் ஊடாக இந்தப் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பணப் பரிமாற்றங்கள் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அவற்றுக்கு அமைவாக உண்மையில் எந்தவொரு பொருட்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.










