இலங்கையைச் சேர்ந்த ஒருவர், ரஷ்ய மொழியில் சரளமாகப் பேசி ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஷ்யாவின் ‘ரஷ்யா டுடே’ (RT) ஊடகம் வெளியிட்ட காணொளியில், குறித்த சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த இலங்கையர் மிகுந்த உற்சாகத்துடன் அவர்களுடன் ரஷ்ய மொழியில் உரையாடுவதைக் காணமுடிகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்ய மொழியைத் தாமாகவே கற்றுக்கொண்டதாக அவர் சுற்றுலாப் பயணிகளிடம் தெரிவித்துள்ளார். எவ்வித முறையான பயிற்சியுமின்றி சுயமாக மொழியைக் கற்றுக்கொண்ட அவர், அதனைச் சரளமாகப் பேசும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது, மொஸ்கோ மற்றும் முர்மான்ஸ்க் உள்ளிட்ட ரஷ்யாவின் பல நகரங்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது ரஷ்ய மொழித் திறமையும் புவியியல் அறிவும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ளன.
இந்தச் சந்திப்பு தொடர்பான காணொளி இணையத்தில் பரவி வரும் நிலையில், இலங்கையர் ஒருவரின் சுயகற்றல் திறமை குறித்துப் பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.










