போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், 10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு மத்திய குற்ற விசாரணைப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து (UAE) இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான கடத்தல் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரின் சொத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி, தனது மகன், தந்தை மற்றும் மற்றுமொரு நெருங்கிய உறவினர் ஆகியோரின் பெயர்களில் சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ், 2026 ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு அமுலாகும் வகையில் குறித்த சொத்துக்களை முடக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தச் சொத்துக்களை விற்பனை செய்தல், கைமாற்றுதல் அல்லது அவை தொடர்பான ஏனைய பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் தடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொரலஸ்கமுவ, தெஹிவளை வீதியில் அமைந்துள்ள சுமார் 3.5 கோடி ரூபாய் பெறுமதியான உடற்பயிற்சிக் கூடம், தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி, வீடு மற்றும் விவசாய நிலம் ஆகியவற்றின் மொத்த மதிப்பீட்டுப் பெறுமதியான சுமார் 3.5 கோடி ரூபாய், அத்துடன் யக்கல பகுதியில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் உள்ள சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான குடியிருப்பு அலகு ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இந்தச் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதையோ அல்லது வேறு தரப்பினருக்கு மாற்றப்படுவதையோ தடுக்கும் நோக்கில் முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலத்தையும், அவை சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையுடன் கொண்டுள்ள தொடர்பையும் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகளை மத்திய குற்ற விசாரணைப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.










