இலங்கையில் முன்பள்ளிகள் மற்றும் சிறுவர் ஆரம்பகால அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய தரநிலைகள் (SLS) 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டின் முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான மூலோபாய இலக்குகளைத் தீர்மானிப்பதற்கும் நடைபெற்ற அமைச்சின் மீளாய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபோதே, நேற்று வியாழக்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆரம்பகால சிறுவர் பராமரிப்புத் துறையை மாற்றியமைக்கும் முக்கிய ஆண்டாக 2027 அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆரம்பகால சிறுவர் போசாக்கு, கல்வி மற்றும் பராமரிப்பு தொடர்பான இலக்குகளின் கீழ், 2027ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய ஆரம்பகால சிறுவர் அபிவிருத்திச் செயலகமும் தேசிய கல்வி நிறுவகமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனுடன் இணைந்து, முன்பள்ளிகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கான தேசிய தரநிலைகளை இலங்கை தரப்படுத்தல் நிறுவனத்துடன் (SLSI) இணைந்து அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பள்ளிக் குழந்தைகளிடையே சிறந்த நடத்தைப் பண்புகளையும் நேர்மறையான மனப்பாங்குகளையும் வளர்க்கும் நோக்கில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ‘Clean Sri Lanka’ திட்டம் மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட ‘Step-Up’ திட்டத்தின் அடுத்த கட்டம் 2027ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஆரம்பகால சிறுவர் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஆரம்பகால சிறுவர் அபிவிருத்தித் துறையை முறையானதும் கட்டமைக்கப்பட்டதுமான கல்வி நிலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் செயற்பாட்டில் 2027ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.










