இலஞ்சம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட, காலி மாவட்டம்-அக்மீமன முன்னாள் பிரதேச சபைத் தலைவர் மிலிந்த ஹபுதந்திரிக்கு மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஸந்த கொடவெலவினால் கடந்த ஒக்டோபர் 1-ஆம் திகதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2011 மார்ச் 31ஆம் திகதி முதல் 2013 பெப்ரவரி 28ஆம் திகதி வரையான 23 மாத காலப்பகுதியில், அக்மீமன பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் பதவிகளை வகித்தபோது அவர் மேற்கொண்ட செலவுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த காலப்பகுதியில் வருமானத்தை விட அதிகளவில் செலவிடப்பட்ட பணம் இலஞ்சம் மூலம் பெறப்பட்டதாகக் கருதப்பட்டு, இலஞ்சச் சட்டத்தின் 23(a)(1) பிரிவின் கீழ் அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 11ஆம் இலக்க நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், அவருக்கு மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 5,000 ரூபாய் அபராதமும் 75 இலட்சம் ரூபாய் தண்டப்பணமும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மூன்று மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனையும், 75 இலட்சம் ரூபாய் தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறினால் 24 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சார்பில் பிரதி பணிப்பாளர் நாயகம் ருவினி விக்கிரமசிங்க வழக்குத் தொடர்ந்ததாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.










