சுமார் ஐந்து மாதங்களாக காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி ஒருவர், இரண்டு மாதக் குழந்தையுடன் நக்கிள்ஸ் மலைத்தொடரில் உள்ள தனிமையான குகையொன்றில் வசித்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடுதும்பர பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, வனப்பகுதியில் குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிறுமி காணாமல் போனமை தொடர்பில் அவரது குடும்பத்தினர் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
விசாரணைகளின்போது, உள்ளூர் கடையொன்றில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு அரிசி மற்றும் உணவுப் பொருட்களை அடிக்கடி கொள்வனவு செய்த இளைஞர் ஒருவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த இளைஞரைப் பின்தொடர்ந்த பொலிஸார், மக்கள் குடியிருப்புகளிலிருந்து தொலைவிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு பிளாஸ்டிக் தாள்களால் மூடப்பட்ட குகையொன்றைக் கண்டுபிடித்த பொலிஸார், அதன் உள்ளே காணாமல் போயிருந்த 15 வயது சிறுமியையும் அவரது இரண்டு மாதக் குழந்தையையும் மீட்டுள்ளனர்.
சிறுமி மருத்துவ உதவியின்றி குகையிலேயே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு கூர்மையான கருவியொன்று பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், தாயும் குழந்தையும் சுற்றியுள்ள வனப்பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட பாரம்பரிய மூலிகைகளைப் பயன்படுத்தி சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தந்தை என சந்தேகிக்கப்படும் 23 வயதுடைய இளைஞர், கித்துல் பாணி தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரமொன்றில் குழந்தையை குளிப்பாட்டியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, குறித்த 23 வயதுடைய இளைஞரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உறவினர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு சந்தேகநபர்களும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சிறுமியும் அவரது குழந்தையும் பொலிஸ் பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










