3,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதைத் தொடர்ந்து, வீட்டு மற்றும் வர்த்தகப் பாவனையாளர்களுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் கட்டம் கட்டமாக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என LAUGFS எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயு ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும், இதன் மூலம் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைப் படிப்படியாக மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்துள்ளதாகவும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வீட்டு மற்றும் வர்த்தகப் பாவனையாளர்கள் இரு தரப்பினருக்கும் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், பல கட்டங்களாக விநியோக நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்வதற்காக விற்பனை நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்னர், அவை கையிருப்பில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு நுகர்வோரிடம் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பான சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள, அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட LAUGFS எரிவாயு முகவரைத் தொடர்புகொள்ளுமாறும் அல்லது நிறுவனத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1345ஐ அழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.










