அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் இடம்பெற்ற சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர், பொலிஸ் அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்துவதாகக் கூறப்படும் காணொளி வெளியாகியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறித்த காணொளியில் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலைப் படுக்கையில் தேரர் அமர்ந்திருப்பதுடன், அவரைச் சுற்றி மருத்துவப் பணியாளர்களும் பொலிஸ் அதிகாரிகளும் காணப்படுகின்றனர். இதன்போது, தம்முடன் வந்திருந்த பொலிஸ் அதிகாரிகளைத் தேரர் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன் அச்சுறுத்தல்களையும் விடுப்பது போன்ற காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன.
அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள், போராட்டப் பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்ற இடத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கும், ராஜாங்கனை சத்தரதன தேரர் உள்ளிட்ட மற்றொரு குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அனுராதபுரம் புனித நகரப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஏழு பேரையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புனிதப் பகுதியில் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்ததன் மூலம் ஏற்கனவே நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை சந்தேகநபர்கள் மீறியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.










