உமா ஓயா திட்டத்தினால் வெலிமடை, ஊவா பரணகம மற்றும் ஹாலி எல ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வந்த காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க அமைச்சரவை உபகுழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களினால் கடந்த கால நட்டஈடு மதிப்பீடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட புதிய விஞ்ஞானபூர்வ மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நட்டஈடு வழங்கும் செயல்முறையின் முதற்கட்டமாக, உமா ஓயா நீர்த்தேக்க நிர்மாணப் பணிகளுக்காகக் காணிகள் கையகப்படுத்தப்பட்ட 276 நபர்களுக்காக 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஊவா பரணகம மற்றும் வெலிமடை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 73 குடும்பங்களுக்கு, தலா 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான நட்டஈடு காசோலைகள் இன்று (12) பதுளை மாவட்ட செயலகத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டன.
அமைச்சரவை உபகுழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று முன்னெடுத்த கண்காணிப்பு விஜயத்தின் பின்னரே இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. அதிகளவான பயனாளிகள் ஏற்கனவே தங்களுக்குரிய நட்டஈட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டு அதில் கையொப்பமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் வெலிமடை, ஊவா பரணகம மற்றும் ஹாலி எல பகுதிகளில் காணி உரிமை மற்றும் நட்டஈடு தொடர்பாக நிலவும் பல சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.