கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சில் இன்று (செவ்வாய் கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த டாக்டர் பிரசீலா சமரவீர, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 27,754 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 14 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
குறிப்பாக கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
தற்போது நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும், பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் டாக்டர் சமரவீர எச்சரித்தார்.
எனவே, நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
காய்ச்சல், தசை வலி, தலைவலி, வாந்தி, குமட்டல் அல்லது உடலில் சிவப்பு புள்ளிகள் போன்ற அறிகுறிகளில் குறைந்தது இரண்டு காணப்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடுகளை விடவும் பாடசாலைகள், பணிவிடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்களிலேயே நுளம்பு பெருகும் இடங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன.
நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களை வைத்திருக்கும் வளாகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முறையற்ற கழிவு அகற்றலே நுளம்பு பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதால், நுளம்பு பெருகும் இடங்களை ஒழிப்பதில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.