குருநாகல் – மாத்தளை வீதியின் யட்டவத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 24 வயதுடைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மாத்தளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் முன்னால் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் பின்புறத்தில் மோதியுள்ளது.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி, வீதியோரக் கடையொன்றுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யட்டவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யட்டவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், பறயனாலன்குளம் முகாமில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யட்டவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










