மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (09) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அவதானம் மட்டத்தை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளாவிய காலநிலைக் கணிப்பு மாதிரிகளின் தரவுகள், வளிமண்டல ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வெப்பச் சுட்டெண் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.
திறந்தவெளியில் தொழில் புரிவோர் அடிக்கடி போதியளவு நீர் அருந்துவதுடன், நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்லக் கூடாது. வெயிலில் அதிக சிரமத்தை ஏற்படுத்தும் பணிகளைத் தவிர்ப்பதுடன், வெளியே செல்லும் போது வெள்ளை அல்லது மென்மையான நிறத்திலான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரிக்கும் காலங்களில் உடல்நிலையில் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.