மட்டக்களப்பில் மெதடிஸ்த மிஷன் திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேரணிகள் மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகாமையை வந்தடைந்ததும், அங்கிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரதான அரங்கிற்கு பண்ட் பாத்திய இசை முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி உள்ளிட்ட மொடிஸ்த மிஷன் திருச்சபையின் கொடிகள் என்பன ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து மாணவர்களின் அழகிய வரவேற்பு நடனத்துடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது மிஷனரிமார்களின் தியாக வாழ்வு, ஆன்மீகப் பணி மற்றும் சமூகப் பணிகள் குறித்த விசேட கண்காட்சி ஒன்றும் காந்தி பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக இடம்பெற்றது.
இவ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ஆன்மீகப் பணியோடு இணைந்து இந்நாட்டில் கல்வி மற்றும் சமூக மாற்றங்களை ஏற்படுத்திய மிஷனரிமார்களின் அளப்பரிய அர்ப்பணிப்பை நினைவுகூரும் இந்நாளில், சாதி, மத பேதமின்றி அதிகளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.