மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜ.ஆர்.சி பட்டியலில் உள்ள பிரபல போதை பொருள் வியாபாரியான 31 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 20-ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
குறித்த நபரின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீட்டில் வசித்து வரும் 13 வயது சிறுமியின் தந்தை மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று மனைவி பிள்ளைகளுடன் தகராறு செய்வது வழக்கம்
பெற்றோரால் ஒழுங்காக பராமரிக்கப்படாத குறித்த சிறுமி சில நேரங்களில் அவரது உறவினரான குறித்த சந்தேகநபரின் வீட்டில் சென்று தங்குவது வழக்கம்
இந்நிலையில் சம்பவ தினமான கடந்த 6-ம் திகதி திங்கட்கிழமை இரவு குறித்த சந்தேகநபரின் தாயாருடன் சிறுமி நித்திரைக்கு சென்றுள்ளார்.
நள்ளிரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சிறுமியை ரகசியமாக எழுப்பிய சந்தேகநபர் சிறுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால் சிறுமி வர மாட்டேன் என தெரிவித்து சத்தம் போட முயன்ற போது சந்தேகநபர் சிறுமியின் வாயை பொத்தி வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்றுள்ளார்.
அதன்பின் பக்கத்தில் இருந்த பாழடைந்த காணி ஒன்றினுள் சிறுமியை கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் பெற்றோர் குறித்த சந்தேகநபரின் உறவினர் என்பதால் அதனை மூடி மறைத்ததுடன் பொலிசாருக்கு புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்
இந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் 1195 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே போதைப்பொருள் வியாபாரம் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளி வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அத்துடன் சந்தேகநபர் இலங்கை பொலிஸாரின் குற்றவாளிகள் பட்டியலான ஜ.ஆர்.சி பட்டியலில் சேர்க்கப்பட்ட குற்றவாளி என்பதும் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.