கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின்போது, பலாங்கொட கஸ்ஸப தேரர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர்.
பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின்போது, தேரர் கொன்கிரீட் படியில் தவறி விழுந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித் ஓதுதல் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது பொலிஸார் தேரர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி சமூக ஊடகங்களில் காணொளியொன்று பரவி வருகின்றது. இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.
சினமன் கார்டன்ஸ் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தவும், கூடாரத் துணிகளைப் பயன்படுத்தி தற்காலிகக் கூடாரம் அமைக்கவும் போராட்டக்காரர்கள் முயன்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான அனுமதி இல்லை எனப் பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிலர் முன்னோக்கி நகர்ந்து, பொலிஸ் அதிகாரிகளைத் தள்ளியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, பொலிஸ் அதிகாரிகளைத் தள்ளிக்கொண்டு முன்னேற முயன்ற தேரர், கான்கிரீட் படியில் தவறி விழுந்து தரையில் வீழ்ந்ததாகப் பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக அவர் இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, பொலிஸ் அதிகாரிகள் தேரர் மீது தாக்குதல் நடத்தவில்லை எனப் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர், பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய வகையில், பொய்யான அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சினமன் கார்டன்ஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை உரிய சட்ட நடைமுறைகளின் ஊடாக விடுவிக்கக் கோரி இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத காணொளிகள் மற்றும் தகவல்களைப் பகிரும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.










