கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர்.
இது தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்பட்டு இலங்கை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை, விகாரமஹாதேவி பூங்காவில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, சுவ செரிய அவசர மருத்துவ சேவை அம்புலன்ஸ் மூலம் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன்போது, பொலிஸார் தமது தேரர் மீது தாக்குதல் நடத்தியதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளைப் பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தைத் தொடர்வதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை போராட்டக்காரர்கள் விகாரமஹாதேவி பூங்காவிற்கு இடம்பெயர்ந்தனர்.
தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாகப் பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.










