கணேமுல்ல, பொல்லத்த பகுதியில் திட்டமிட்ட கொலைச் சம்பவமொன்றுக்குப் பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த துப்பாக்கி மயானம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த துப்பாக்கி அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவமொன்றை மேற்கொள்ளும் நோக்கில் இந்த ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.










