சமனலவெவ பகுதியில் கல்விச் சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 16 வயது மாணவர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொனராகலை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று சபரகமுவ பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்ததுடன், பின்னர் குரகல புனித தலத்திற்குச் செல்லும் வழியில் சமனலவெவ அணையை பார்வையிடுவதற்காக அங்கு சென்றுள்ளனர்.
இதன்போது, பேருந்தொன்றில் பயணித்த மூன்று மாணவர்கள் நீராடும் நோக்கில் நீர் வெளியேறும் பகுதியொன்றிற்கு அருகில் சென்றுள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில், காணாமல் போன மாணவரின் சடலம் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவர் பிபில, கிரியங்கும்புர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவரின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










