இலங்கை முழுவதும் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட இரண்டு விசேட சோதனை நடவடிக்கைகளின்போது, நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைந்த எடையிலான பாண் தொடர்பில் 89 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட பாண் எடையைப் பின்பற்றுதல் மற்றும் பாணின் எடை, விலை தொடர்பான தகவல்களை முறையாகக் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட இந்த இரண்டு சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 225 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 29ஆம் திகதி நடத்தப்பட்ட அண்மைய சோதனை நடவடிக்கையின்போது 107 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டதுடன், அவற்றில் 35 இடங்களில் குறைந்த எடையிலான பாண் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
மேலும், 85 நிறுவனங்களில் பாணின் எடை முறையாகக் காட்சிப்படுத்தப்படாததுடன், 55 நிறுவனங்களில் பாணின் விலை முறையாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. இந்த நடவடிக்கையின்போது மொத்தம் 71 பேக்கரிகளும் பரிசோதிக்கப்பட்டன.
சில்லறை விற்பனை நிலையங்களில் கண்டுபிடிக்கப்படும் குறைந்த எடையிலான பாண் எந்த பேக்கரியில் உற்பத்தி செய்யப்பட்டது அல்லது எந்த பேக்கரியிலிருந்து விநியோகிக்கப்பட்டது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைந்த எடையில் பாண் உற்பத்தி செய்யும் பேக்கரிகளின் உற்பத்தி நடைமுறைகளை உடனடியாகத் திருத்துமாறு அறிவுறுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், போதுமான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பேக்கரிகளுக்கு எதிராக உரிய நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, செப்டம்பர் 1 முதல் 3ஆம் திகதி வரை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 118 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டிருந்தன. அதன்போது 54 குறைந்த எடையிலான பாண் தொடர்பான சம்பவங்கள் கண்டறியப்பட்டிருந்தன.
இலங்கை முழுவதும் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் தொடர்புடைய முறைகேடுகள் குறித்து அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை வழங்குமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.










