மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் அஞ்சல் சேவை (EMS) ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பொதிகள் மற்றும் பொருட்கள் உரிய சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என அஞ்சல் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் காரணமாக அரசாங்கத்திற்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், நாட்டின் பெறுமதிமிக்க வளங்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் அண்மையில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பொருட்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் இயங்கிய எக்ஸ்பிரஸ் அஞ்சல் சேவை பிரிவு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அந்த இடம் 24 மணி நேர சேவை நிலையமாக அறிவிக்கப்பட்டமை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக எக்ஸ்பிரஸ் அஞ்சல் சேவை நிலையத்தில் இலங்கை சுங்கத் திணைக்களம், தாவரத் தனிமைப்படுத்தல் அதிகாரிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் இயங்கி, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பொதிகள் மற்றும் பொருட்களை கண்காணித்து வந்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அஞ்சல் திணைக்களம் அந்த நிலையத்தின் முழுமையான கட்டுப்பாட்டை பெற்றுள்ளதாகவும், இதனால் கொத்தலை ஹிம்புட்டு, வல்லப்பட்டை, நீல அல்லி உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட தாவரங்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் உரிய அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சில பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு முன்னர் ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்த நிலையில், தற்போது அவ்வாறான அனுமதிகளைப் பெறாமல் அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து பொருட்கள் வெளியேறும் சர்வதேச எல்லையாக மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையம் செயற்படுவதால், அங்கு உரிய பரிசோதனைகள் இடம்பெறாதது தடைசெய்யப்பட்ட பொருட்கள் கட்டுப்பாடின்றி நாட்டை விட்டு வெளியேற வழிவகுக்கலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.










