ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ், 177 மில்லியன் ரூபா செலவில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிறுவப்பட்ட அதிநவீன CT ஸ்கேன் இயந்திரம் நேற்று புதன்கிழமை பிற்பகல் உத்தியோகபூர்வமாக மருத்துவ சேவையில் இணைக்கப்பட்டது.
நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து தினமும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் நிலையில், நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் நோய் கண்டறியும் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த புதிய CT ஸ்கேன் இயந்திரம் முக்கிய பங்களிப்பை வழங்கும்.
இதுவரை CT ஸ்கேன் பரிசோதனைகளுக்காக நோயாளிகள் ராகம போதனா வைத்தியசாலை மற்றும் வெலிசறை வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டியிருந்தது.
புதிய இயந்திரம் மூலம் இந்த வசதியை நீர்கொழும்பு வைத்தியசாலையிலேயே பெற்றுக்கொள்ள முடிவதால், நோயாளிகளின் பயண நேரமும் போக்குவரத்துச் செலவும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது










