இலங்கை சுங்கத் திணைக்களத்தின் CBHQ1 அலுவலக குறியீட்டின் கீழ் முழு கொள்கலன் (FCL) இறக்குமதிகளுக்கான ஆவணங்களை நேரடியாக கையளிக்கும் முறை, எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி முதல் நிறுத்தப்படவுள்ளது.
காகிதமற்ற சுங்கப் பிரகடன முறைக்கு மாறும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முழு கொள்கலன் இறக்குமதிகளுக்கான சுங்கப் பிரகடனங்களை (CusDec) காகிதமற்ற முறையில் செயல்படுத்தும் திட்டம் ஒக்டோபர் 1ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
புதிய முறையைப் பயன்படுத்த அனைத்து இறக்குமதியாளர்களும் டிஜிட்டல் கையொப்பத்தைப் பெற்று, தேவையான பதிவுகளை ஒக்டோபர் 19ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும் என சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரை சுமார் 2,000 இறக்குமதியாளர்கள் டிஜிட்டல் கையொப்பங்களைப் பெற்றுள்ள நிலையில், கணிசமான எண்ணிக்கையிலான இறக்குமதியாளர்கள் இன்னும் பதிவை நிறைவு செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டிஜிட்டல் கையொப்பத்திற்காக பதிவு செய்துள்ள இறக்குமதியாளர்கள், ஒக்டோபர் 19ஆம் திகதிக்கு முன்னரே காகிதமற்ற முறையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஏனைய இறக்குமதியாளர்களும் காலக்கெடுவுக்கு முன்னர் டிஜிட்டல் கையொப்பப் பதிவை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










