வாகனங்களை திறந்த ஆவணத்தில் விற்பனை செய்வதைத் தவிர்த்து, முறையான உரிமை மாற்ற நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ, வாகனத்தை விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவர் ஆகிய இருவரும் MTA 6 படிவத்தில் கையொப்பமிட்டு, அதற்கான பிரதியை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதுடன், மோசடி நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதே இந்த நடைமுறையின் நோக்கம் என அவர் விளக்கமளித்துள்ளார்.
வாகன உரிமையை முறையாக மாற்றாமல் திறந்த ஆவணத்தில் வாகனங்களை விற்பனை செய்வது, பின்னர் அந்த வாகனம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, வாகன உரிமையாளர்கள் உத்தியோகபூர்வ உரிமை மாற்ற நடைமுறைகளைப் பின்பற்றி, வாகனங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் ஒத்துழைக்குமாறு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.










