களுத்துறை அருகே பேருந்தில் பயணிக்கையில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் திருமணமான நபரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவி, களுத்துறை பகுதியில் பேருந்தில் பயணித்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிக்கு அருகில் அமர்ந்திருந்த அடையாளம் தெரியாத நபர், பயணத்தின்போது தேவையற்ற வகையில் தனது உடலை மாணவியின் உடலுடன் உரசியதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேருந்திலிருந்து இறங்குவதற்கு முன்னர் குறித்த நபர் தனது தொலைபேசி இலக்கம் எழுதப்பட்ட சிறிய காகிதத் துண்டொன்றை மாணவியின் மடியில் வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியிடம் குறித்த நபர் வழங்கிய தொலைபேசி இலக்கம் அடங்கிய காகிதத்தை மாணவி பின்னர் தனது தந்தையிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, அந்த நபர் யார் என்பதை அறிந்துகொள்ளும் நோக்கில் மாணவியின் பெற்றோர் குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
மாணவியின் தாயார், மாணவி போன்று பாசாங்கு செய்து சந்தேகநபருடன் தொலைபேசியில் பேசியதுடன், அவரை களுத்துறை நகருக்கு வருமாறு ஏற்பாடு செய்ததாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 2ஆம் திகதி களுத்துறை பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிக்கு சந்தேகநபர் வந்துள்ளார்.
இதன்போது மாணவி அவரை சந்திக்கச் சென்ற நிலையில், அவரது தந்தையும் இரண்டு மாமன்மாரும் அருகில் கண்காணித்துக் கொண்டிருந்துள்ளனர்.
சந்தேகநபர் மாணவியின் கையைப் பிடித்துக்கொண்டு களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தை நோக்கி நடந்து சென்றதாகவும், இதன்போது தந்தையும் மாமன்மாரும் தலையிட்டு அவரை பிடித்து களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில், சந்தேகநபர் பண்டாரகம, கிரிமந்துடாவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய திருமணமான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் சிவில் பாதுகாப்புப் படை முகாமில் கடமையாற்றி வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக களுத்துறை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.










