இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற Commonwealth Food Fair நிகழ்வில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ‘சிறந்த உணவு’ விருதை இலங்கை வென்றுள்ளது.
Commonwealth Club Cricket Cup 2026 கிரிக்கெட் போட்டியுடன் இணைந்து நடைபெற்ற இந்த உணவுத் திருவிழா, செப்டம்பர் 26ஆம் திகதி Roma Cricket Ground மைதானத்தில் இடம்பெற்றது. Commonwealth Club of Rome மற்றும் UISP Roma இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு, இத்தாலிய கிரிக்கெட் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது.
‘சிறந்த உணவு’ விருதை வென்றதுடன், இலங்கை தூதரக அணியானது கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றதுடன், ‘சிறந்த அணியின் சீருடை’ (Best Team Jersey) விருதையும் வென்றது.
ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்துடன் (SLTPB) இணைந்து இந்த நிகழ்வில் பங்கேற்றது. இதன்போது இலங்கையின் உணவு, கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான அம்சங்கள், பல்வேறு நாடுகளின் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
ரோம் நகரிலுள்ள Suresh Food & Drinks Restaurant மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை உணவுக் கூடத்தில் கொத்து, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், சீனி சம்பலுடன் பொல் ரொட்டி, மரக்கறி ரோல்ஸ், சிக்கன் பட்டீஸ், வட்டலப்பம் உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் சிலோன் தேநீரும் வழங்கப்பட்டது.
இதனிடையே, இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோ, சமூகங்களை ஒன்றிணைப்பதில் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், இத்தாலியில் கிரிக்கெட் விளையாட்டுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை அணிக்கு விருது பெற்ற சீருடையில், மரூன் மற்றும் தங்க நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், சிங்கம் மற்றும் தாமரைச் சின்னங்களுடன் ரோம் நகரின் முக்கிய அடையாளங்களும் இடம்பெற்றிருந்தன.
இவ்வாண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் தூதரக அணிகள், ஐக்கிய நாடுகள் அமைப்புகளின் அணிகள், Commonwealth Club of Rome அணி மற்றும் Rome International–University of Cassino அணி என மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்றன.
இலங்கை முதன்முறையாக 2024ஆம் ஆண்டு இந்த நிகழ்வில் பங்கேற்று ‘சிறந்த உணவு’ விருதை வென்றதுடன், கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தது. 2025ஆம் ஆண்டிலும் உணவு விருதை தக்கவைத்த இலங்கை, கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றது.
இத்தகைய நிகழ்வுகள் மூலம் இலங்கையின் உணவு, சுற்றுலா, கலாசாரம் மற்றும் விளையாட்டு பாரம்பரியங்களை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்துவதுடன், இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.










