திருகோணமலை, ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் குடில் அமைத்து புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஆஜராகத் தவறியமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர், இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேரர் சார்பில் சட்டத்தரணி மஞ்சுள சேனநாயக்க முன்னிலையானார். அவரே தேரர் சார்பில் பிணை கோரிக்கையையும் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
இதனையடுத்து, பலாங்கொடை கஸ்ஸப தேரரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், தேரர் சமூக ஊடகங்களுக்கு கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இவ்வழக்கின் அடுத்த விசாரணைக்காக 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 16ஆம் திகதி பலாங்கொடை கஸ்ஸப தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்காக எந்தவொரு சட்டத்தரணியும் முன்னிலையாகவில்லை. இதன்போது, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்கான தனது விளக்கத்தை தேரர் தனிப்பட்ட முறையில் முன்வைத்திருந்தார்.
எனினும், நீதிமன்றத்தைத் தவிர்த்தமை தொடர்பில் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு அன்றைய தினம் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
திருகோணமலை கடற்கரையிலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் அனுமதியின்றி குடில் அமைத்து புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளில் கடந்த 11ஆம் திகதி ஆஜராகத் தவறியதையடுத்து, பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, இன்று சட்டத்தரணி ஊடாக பிணை கோரப்பட்டதைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.










