கஹவத்த ஆதார வைத்தியசாலையில் கைவிடப்பட்ட பொருட்களைச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த மூடப்பட்ட கட்டடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை சுமார் 3.45 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ, சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு இரத்தினபுரி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டு, தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் முன்னர் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பின்னர், நோயாளர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பழைய கட்டடம் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அந்தக் கட்டடம் கைவிடப்பட்ட பொருட்களைச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்ட குறுக்கிணைப்பே (Short Circuit) தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், தீ ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.










