பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது தங்களது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதைத் தடைசெய்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அவ்வாறான எந்தவொரு சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும், பொதுமக்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளுடன் பொலிஸ் நிலையங்களுக்குள் செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பொலிஸ் தடுப்புக் காவல் அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடம் கையடக்கத் தொலைபேசிகளை ஒப்படைக்க முற்படும் சந்தர்ப்பங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
அத்தகைய சந்தர்ப்பங்களைத் தவிர, பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு பொதுமக்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.










